தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதியளித்ததை கண்டித்து நாகை மாவட்ட விவசாயிகள் குளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் 272 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக ஓஎன்ஜிசி, வேதாந்தா நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாகை மாவட்டம் பாலையூரில் விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள் குளத்தில் இறங்கி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அப்போது ஓஎன்ஜிசி, வேதாந்தா நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் எனவும் முழக்கமிட்டனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரியலூர் அருகே விளைநிலத்தில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். புதுக்குடி கரைமேடு பகுதியை சேர்ந்த விவசாயிகள், விளைநிலத்தில் நின்றபடி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.