வியாழன், 16 மே, 2019

ராஜீவ்காந்தி கொலை வழக்கில், மாநில அரசு சட்டத்தின்படி தண்டனை பெற்ற 7 தமிழர்களின் விடுதலைக்கு மட்டும் மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவது ஐயங்களை ஏற்படுத்தியுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சஞ்சய் தத் - பேரறிவாளன் விவகாரத்தில், மத்திய அரசு இரட்டை அளவுகோல்களை பயன்படுத்துவது மிகவும் வருத்தமளிப்பதாக கூறியுள்ளார். தகுதியே இல்லாத சஞ்சய் தத்தை விடுதலை செய்வதும், சட்டப்படி அனைத்து தகுதிகளும் இருந்தும் 7 தமிழர்களை விடுதலை செய்ய மறுப்பதும் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். இதனைக் கவனிக்கும் போது, தண்டனைக் குறைப்புகளும், விடுதலைகளும் சட்டத்தின்படி தீர்மானிக்கப்படுகின்றனவா? அல்லது தமிழர்கள் - தமிழர் அல்லாதவர்கள் என்ற அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றனவா? என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில், 7 தமிழர்களை விரைந்து விடுதலை செய்யும் முடிவுக்கு ஆளுநருக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 7 பேர் விடுதலையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தாமதப்படுத்தினால், குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவுகளின்படி அவர்களை தமிழக ஆட்சியாளர்களே விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Image
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதார் கார்டுகள் கொட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கட்டிமேடு ஊராட்சிக்குட்பட்ட, எல்லை நாலடி பகுதியில், முள்ளியாற்றின் அருகே மூட்டை மூட்டையாக ஆதார் கார்டுகள் கொட்டப்பட்டிருந்தன. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், திருத்துறைப்பூண்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வருவாய்த்துறையினருடன் அங்கு சென்ற காவல்துறையினர், ஆதார் அட்டைகளை ஆய்வு செய்தனர். அஞ்சலக ஊழியர்கள் கொண்டுவந்து கொட்டினார்களா? அல்லது போலி ஆதார் கார்டுகளா என்ற அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.