மக்களவை தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் பெற்றுள்ள வாக்கு சதவிகிதம் என்ன என்ற சந்தேகம் அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தலில், திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும், அதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இதில் திமுக 32 சதவிகித வாக்குகளையும், அதிமுக 18 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளன.
பெரும்பாலான தொகுதிகளில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம், நாம் தமிழர் கட்சிகளுக்கு நிகராக மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளன. அமமுக 4.8 சதவிகித வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 3.8 சதவிகிதமும், மக்கள் நீதி மய்யம் 3.7 சதவிகித வாக்குகளையும் பெற்றன.
மக்களவை தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி ஐந்து தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. கொங்கு மண்டலமான கோயமுத்தூரில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரன் ஒரு லட்சத்து, 44 ஆயிரத்து 808 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஸ்ரீதர் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 525 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டார். தென் சென்னையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட ஆர். ரங்கராஜன் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 465 வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்தை பெற்றார்.
வட சென்னையில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மௌரியா ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 167 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தைப்பிடித்தார். இதேபோன்று மதுரை, திருப்பூர், சேலம், விருதுநகர் தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது.