திங்கள், 27 மே, 2019

ஜார்கண்ட், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா! May 27, 2019

Image
தேர்தல் தோல்வியை தொடர்ந்து ஒரே நாளில் ஜார்கண்ட், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்வர்கள் ராஜினாமா செய்துள்ளது காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
2014ஐ போலவே 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது காங்கிரஸ் கட்சி. அதே நேரத்தில் 2014ஐ காட்டிலும் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த வெற்றியை பதிவு செய்துள்ளது பாஜக. மொத்தமுள்ள 542 தொகுதிகளில் 352ல் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.
39 ஆண்டுகளாக நேரு குடும்பத்தின் தொகுதியாக விளங்கிவந்த அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுலே தோல்வியை தழுவியது காங்கிரஸ் கட்சியின் மோசமான வீழ்ச்சியாகும்.
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று உத்தரப்பிரதேசம், ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இந்த நிலையில் இன்று ஜார்கண்ட், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்களும் ராஜிமானா செய்துள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலத்தை பொருத்தவரை மொத்தமுள்ள 14 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜோய் குமார் தனது பதவியை ராஜினாமா செய்து ராகுல் காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.
ஜார்கண்ட் காங். தலைவர் அஜோய் குமார் ராஜினாமா குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அலோக் துபே கூறும்போது, மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸுக்கு மோசமான தோல்வி கிடையாது. ஒரு தொகுதியில் வெற்றியும், இரண்டு தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலுமே தோல்வி பெற்றுள்ளது என கூறினார்.
பஞ்சாபை பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளில் காங்கிரஸ் 8ல் வென்றிருந்தது. இருப்பினும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் குமார் ஜாகர் தான் போட்டியிட்ட குர்தாஸ்பூர் தொகுதியில் பாஜகவின் சன்னி தியோலிடம் தோல்வியடைந்தார். இந்த தோல்விக்கு பொறுப்பேற்று தனது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்திக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
முன்னதாக உத்தரப்பிரதேசம் (ராஜ் பாபர்), ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர்களும், உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதி தலைவர் யோகேந்திர மிஸ்ராவும், கர்நாடக காங்கிரஸ் பிரச்சாரக் குழுத் தலைவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 4 மாநில காங்கிரஸ் தலைவர்கள் இதுவரை ராஜினாமா செய்துள்ளனர்.
இதே போல காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தின் போது தேசிய தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய முன்வந்த போதிலும், காரிய கமிட்டி அதனை நிராகரித்தது நினைவுகூரத்தக்கது.