செவ்வாய், 28 மே, 2019

72 ஆண்டுகளுக்கு பிறகு மின் இணைப்பு பெற்ற பழங்குடியின மக்களின் குடியிருப்பு...! May 28, 2019

Image
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள குடியிருப்பிற்கு 72 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட முண்டந்துறை வனச்சரகத்தில் அகஸ்தியர் காணிக்குடியிருப்பு, சின்ன மயிலாறு காணிக்குடியிருப்பு, பெரிய மயிலாறு காணிக்குடியிருப்பு, இஞ்சிக்குளி, சேர்வலாறு காணிக்குடியிருப்பு உள்ளிட்ட மலைவாழ் பழங்குடி மக்கள் வாழும் குடியிருப்புகள் உள்ளன. 
இவற்றில் சின்ன மயிலாறு, பெரிய மயிலாறு, இஞ்சிக்குழி உள்ளிட்ட குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வசதி வழங்கப்படவில்லை. பெரிய மயிலாறு, இஞ்சிக்குழி இரண்டும் காரையாறு அணைக்கு மேல் அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் அங்கு மின் இணைப்புக் கொடுக்க முடியாத நிலை உள்ளது. ஆனால் சின்ன மயிலாறு காரையாறு அணையின் அடிவாரப் பகுதியில் தாமிரபரணியின் கரையில் உள்ளது. 
இங்கு சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். 30க்கும் மேற்பட்டவர்கள், பள்ளி கல்லூரிகளில் படித்து வருகின்றனர். பாதுகாக்கப்பட்ட காப்புக் காடு என்ற வகையில் வனத்துறையினர் மின் இணைப்பு கொடுக்க அனுமதி மறுத்துவந்தனர். மின்சார இணைப்பு கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருவது பற்றி, நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்தது. 
ஆண்டுதோறும் வடகிழக்குப்பருவ மழைக் காலத்தில் குடியிருப்புப் பகுதிக்குச் செல்ல வழியின்றி தவித்து வரும் காலங்களிலும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி அவர்களின் இன்னல்களைப் பலமுறை படம்பிடித்துக் காட்டியது. இதையடுத்து கடந்த ஆண்டு மின்வாரியத்தின் மூலம், சுமார் 109 பேருக்கு சூரிய மின்சாரக் கருவி வழங்கப்பட்டது.  
இந்நிலையில் வனத்துறையினர் மின் இணைப்பு கொடுக்க மின்வாரியத்திற்கு அனுமதி அளித்ததோடு மின் இணைப்பிற்கான முழு நிதி உதவியையும் வனத்துறையினரே வழங்கினர். உடனே மின்வாரியத்தினர் சின்ன மயிலாறு பகுதிக்கு மின்சாரம் வழங்குவதற்கான பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டனர். 
பழங்குடியின மக்களின் குடியிருப்பு பகுதி
48 குடியிருப்புகளுக்கும் ஒரு நீர் இறைக்கும் மோட்டாருக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. நீண்ட நாள்களாக மின்வசதி இல்லாத பழங்குடி மக்களுக்கு மின் இணைப்புக் கொடுக்கும் பணியை மேற்கொண்டது மிகுந்த மனநிறைவை ஏற்படுத்தியுள்ளதாக மின்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.