செவ்வாய், 21 மே, 2019

வாக்குப்பதிவு எண்ணிக்கையில் சந்தேகத்தை கிளப்பும் எதிர்க்கட்சிகள்...! May 21, 2019

Image
யாருக்கு வாக்களித்தோம் என்கிற ஒப்புகைச் சீட்டையும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள வாக்குகளையும் ஒப்பிட்டு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என வலியுறுத்துவதற்காக 21 எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் இன்று தலைமைத் தேர்தல் ஆணையரை சந்திக்க உள்ளனர். 
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ், தெலுங்குதேசம், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை வெற்றி கிடைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறும் நிலையில் இந்த குற்றச்சாட்டுக்களை மேலும் வலுவாக எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.
இந்நிலையில் ஆந்திர முதல்வரும் தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தலைமையில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இன்று மாலை 3 மணிக்கு டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்து மனு ஒன்றை அளிக்க உள்ளனர்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கையிலும் ஏதேனும் முரண்பாடுகள் காணப்பட்டால் அந்த தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்குகளையும், யாருக்கு வாக்களித்தோம் என்கிற ஒப்புகை சீட்டுடன் ஒப்பிட்டு பார்த்து வாக்கு எண்ண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்த உள்ளன.