திங்கள், 27 மே, 2019

குடிநீர் கேட்டு, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்! May 27, 2019

குடிநீர் கேட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகம்  இருப்பதாலும், சரிவர மழை பெய்யாததாலும் குடிநீருக்காக பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும் குடிநீருக்காக பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
திருத்தணி அருகே குடிநீர் வழங்கப்படாததால் பொதுமக்கள் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் முத்துக் கொண்டாபுரம் பகுதியில், கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.  ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், மறியல் போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த போலீசார், சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. இப்போராட்டத்தால் சென்னை - திருப்பதி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருத்தனியில் நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டை பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், பொதுமக்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அங்கிருந்து கலைந்து சென்றனர். 
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலிகுடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!
கள்ளக்குறிச்சியில் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி, நகராட்சி அலுவலகம் முன் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, நகராட்சி அலுவலகம் முன் காலிக்குடங்களுடன் திரண்ட பொதுமக்கள் சேலம் - கள்ளக்குறிச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 கள்ளகுறிச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்