source ns7.tv
கோடை வெயில் வாட்டிவதைக்கும் நிலையில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானல், குன்னூர் உள்ளிட்ட குளுமையான பகுதிகளில் குவிந்து வருகின்றனர்.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில், கோடை விடுமுறையை குதூகலமாக கொண்டாட, சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதிகளையும், பசுமை போர்த்திய புல்வெளிகளையும் கண்டுரசிக்கும் சுற்றுலா பயணிகள், குளுமையான சூழலை அனுபவித்து வருகின்றனர். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்யும் அவர்கள், பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களை கண்கொட்டாமல் ரசித்து வருகின்றனர். மோயர் சதுக்கம், குணா குகை, தூண் பாறையில் சுற்றுலா பயணிள் கூட்டம் அலைமோதுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
அதேபோல், கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், குன்னூருக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிம்ஸ் பூங்காவில் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. வாகன நிறுத்தங்கள் இல்லாத நிலையில், சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கும் பல மடங்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். 10 ரூபாய் கட்டணத்திற்கு பதில் 150 ரூபாய் வரை பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.