பதிவான வாக்குகளை ஒப்புகைச் சீட்டுடன் ஒப்பிட்டு எண்ணக்கோரி எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விதமாக விவிபேட் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது, 50 சதவீத ஒப்புகை சீட்டுக்களையும் ஒப்பிட்டு எண்ணக் கோரி உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
காங்கிரஸ், தெலுங்கு தேசம், திமுக, கம்யூனிஸ்ட் உட்பட 21 கட்சிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒரு தொகுதியில் 5 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குகள் மற்றும் ஒப்புகைச் சீட்டுக்களை சரிபார்க்கலாம் என உத்தரவிட்டது.
இதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தது. இதற்கிடையே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.
source ns7.tv