SOURCE ns7.tv
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் வழக்கை உச்சநீதிமன்றம் எதிர்கொண்ட விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை அடுத்து, உச்சநீதிமன்றத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய முன்னாள் நீதிமன்ற பெண் பணியாளர் ஒருவர், இதுதொடர்பாக அனைத்து நீதிபதிகளுக்கும் கடந்த மாதம் 19ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, இதுபற்றி விசாரிக்க நீதிபதிகள் பாப்தே, இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது விசாரணை அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில், ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் கையாண்ட விதம் ஏற்புடையதாக இல்லை எனக் கூறி, வழக்கறிஞர்கள், மகளிர் அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு நிலவியதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.