தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து, நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, சுரளக்கோட்டில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வடதமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், கரூரில் அனல் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகை, கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக பந்தலூரில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்டம் முழுவதும் மீட்பு பணிகளை மேற்கொள்ள 35 குழுக்கள் தயார் நிலையில் உள்ளது என்றும், கனமழையால் 238 இடங்களில் பாதிப்பு ஏற்படலாம் என கண்டறியப்பட்டுள்ளது என்றும் கூறினார்.