செவ்வாய், 11 ஜூன், 2019

நேர்மைக்கு கிடைத்த வெகுமதி....பள்ளி பாடத்தில் இடம்பெற்ற 8 வயது சிறுவன்...! June 11, 2019


Image
பெரும் சாதனைகள் புரிந்தால்தான் பாடப்புத்தகத்தில் இடம்பெற முடியும் என்ற நிலையில், நேர்மை மட்டுமே போதும் என நிரூபித்துக் காட்டி இருக்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த 8 வயது சிறுவன் யாசின். 
3வது படிக்கும் சிறுவனின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மைக் கதை பல சிறுவர்களுக்கு வாழ்வியல் நெறியாக பாடப்புத்தகத்தில் வைக்கப்பட்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம். 8 வயதில் யாராலும் எட்ட முடியாத ஒரு சாதனையைப் படைத்துள்ளான் சிறுவன் யாசின். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாட்ஷா - அப்ரோஸ்பேகம் தம்பதியினரின் இளைய மகன்தான் இந்த முகமது யாசின். அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படித்து வந்தான். 
 
கடந்த ஆண்டு 2ம் வகுப்பு படித்த போது, ஜூலை மாதம் பள்ளிக்கு செல்லும் வழியில் 50,000 ரூபாய் பணத்தை கண்டெடுத்த சிறுவன் முகமது யாசின் அதனை பள்ளியில் தனது ஆசிரியரிடம் ஒப்படைத்தார். உடனே ஆசிரியர் சிறுவனை அழைத்துக் கொண்டு அந்த பணத்தை  மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தார். சிறுவனின் நேர்மையை பாராட்டி பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 
பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற சிறுவன்
சிறுவன் முகமது யாசினின் நேர்மையை நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், ராகவா லாரன்ஸ் ஆகியோர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர். இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்தின் கீழ் வெளியாகியுள்ள 2ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் ஆத்திச்சூடி என்ற தலைப்பில் ‘நேர்பட ஒழுகு’ என்ற வாசகத்துடன் யாசினின் நேர்மை சம்பவம் படக்கதையாகவும் அவர் காவல்துறையில் பணத்தை ஒப்படைத்த காட்சி புகைப்படமாகவும் இடம்பெற்றுள்ளது. 
தன் மகனின் நேர்மையை உச்சி முகர்ந்த யாசினின் தாயார், இதற்குக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். தன்னைப் போன்ற சிறுவர்களுக்கு மட்டுமின்றி, பெரியவர்களுக்கும் தன் செயலால் நேர்மையின் மகத்துவத்தை எடுத்துரைத்த யாசின், நேர்மையின் புதிய இலக்கணம்.