ரயில் பயணிக்கு முறையான சேவை வழங்காத இந்திய ரயில்வே நிர்வாகத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி சாந்தி நகரை சேர்ந்த வரிசை இக்பால் என்பவர் கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு அனந்தபுரி ரயிலில் பயணம் செய்துள்ளார். அவருக்கு ரயிலில் மேல்நிலை படுக்கையுடன் கூடிய இருக்கை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த இருக்கைக்கு செல்வதற்கு முறையான ஏணி வசதி இல்லாமல் இருந்திருக்கிறது.
இதுகுறித்து வரிசை இக்பால் ரயில்வே டிக்கெட் பரிசோதகரிடம் முறையிட்டிருக்கிறார். ஆனால் டிக்கெட் பரிசோதகரோ மாற்று இடம் ஒதுக்கித் தர இயலாது என்றும் முடியவில்லை என்றால் தரையில் படுத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த வரிசை இக்பால் ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றத்தில் வரிசை இக்பால் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், ரயில்வே நிர்வாகத்தின் சேவை குறைபாட்டுக்கு அபராதமாக 15 ஆயிரமும், வழக்கு செலவிற்கு என ஐந்து ஆயிரமும் சேர்த்து இந்திய ரயில்வே நிர்வாகம் 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.