வியாழன், 13 ஜூன், 2019

காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! June 13, 2019

Image
நடிகைகள் காணாமல் போனதாக புகார் வந்தால் மட்டுமே காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், சாதாரண மக்கள் காணாமல் போகும் புகார் மீது நடவடிக்கை எடுபதில்லை என கண்டனம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர் கடந்த பிப்ரவரி 14ம் தேதி தனது 19 வயது மகள் கவுசல்யா காணாமல் போனதாக திருச்செங்கோடு புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கோரி மகேஸ்வரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 
அப்போது நீதிபதிகள், நான்கு மாதத்திற்கு முன் புகார் அளித்தும் காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர். சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் உறவினர்கள் யாரேனும் காணாமல் போனால் இவ்வாறு சாதாரணமாக எடுத்து கொள்வார்களா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நான்கு மாதங்களாக இளம் பெண்ணை மீட்க நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்தனர். 
திரைப்பட நடிகைகள் காணாமல் போனதாக புகார் வந்தால் மட்டுமே காவல்துறை செயல்படுமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாதந்தோறும் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் அதற்கான பணியை செய்ய வேண்டும் என குறிப்பிட்டனர். அவ்வாறு இல்லை எனில் அதற்கான பலன்களை அனுபவிப்பர் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து, இந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது தொடர்பாக, நிலை அறிக்கையை சமர்பிக்க உத்தரவிட்டு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.