செவ்வாய், 11 ஜூன், 2019

வயநாட்டில் ராகுல் காந்தியின் வெற்றி இஸ்லாமியர்களால் தான் கிடைத்தது - ஓவைசி June 10, 2019


Image
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வயநாட்டில் வெற்றி பெற்றதற்கு காரணம் அங்குள்ள 40% இஸ்லாமிய மக்கள் தொகை தான் என அனைத்து இந்திய மஜ்லிஸ் இத்தேஹாதுல் முஸ்லீமன் (AIMIM) கட்சியின் தலைவர் அசாவுதீன் ஓவைசி கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஓவைசி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அமேதியில் தோல்வியை தழுவிய நிலையில் வயநாட்டில் எவ்வாறு வெற்றி பெற முடிந்தது? அங்குள்ள 40% இஸ்லாமியர்களால் தானே?. இஸ்லாமியர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன். இனி யார் தயவாலும் இஸ்லாமியர்கள் பிழைப்பு நடத்தத்தேவையில்லை.
அதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகளை விட்டு ஒதுங்க வேண்டும் என கூறவில்லை, ஆனால் அக்கட்சிகள் போதுமான அளவு வலிமை, எண்ணம், உழைப்பு ஆகியவற்றை கொண்டிருக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். பாஜக எங்கு தோல்வியை சந்தித்தது? பஞ்சாபில், யார் அங்கே இருக்கிறார்கள், சீக்கியர்கள். பாஜக தோல்வியை தழுவியது மாநிலக் கட்சிகளிடம் மட்டுமே காங்கிரஸால் அல்ல என்று ஓவைசி பேசினார்.
கேரளாவின் வயநாட்டில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கம்யூனிஸ்ட் வேட்பாளரை வீழ்த்தினார். அதே நேரத்தில் உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியை தழுவினார். அமேதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.