சனி, 1 ஜூன், 2019

இந்தி திணிப்பை, பாஜக அரசு முயற்சித்தால், அது அவர்களுக்கு பேரிடியாக முடியும் : மு.க.ஸ்டாலின் June 01, 2019

Image
தமிழகத்தில் இந்தி திணிப்பை, பாஜக அரசு முயற்சித்தால், அது அவர்களுக்கு பேரிடியாக முடியும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள இருமொழிக் கொள்கை என்ற தேன்கூட்டில், கல் வீசும்  மும்மொழித் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து விடலாம் என, மத்தியில் உள்ள பாஜக அரசு, தன் கனவின் ஓரத்தில் கூட நினைத்துப் பார்க்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
கஸ்தூரி ரங்கன் தலைமையிலான “புதிய கல்விக் கொள்கை” வகுக்கும் குழு அளித்துள்ள பரிந்துரை, மொழிவாரி மாநிலங்களின் தேசிய உணர்வுகளில், வெந்நீர் ஊற்றும் விதத்தில் அமைந்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டங்களையும், அந்த போராட்டத்திற்காக பலர் உயிர் தியாகம் செய்ததையும் சுட்டிக்காட்டியுள்ள மு.க.ஸ்டாலின், அண்ணாவால் கொண்டுவரப்பட்ட இருமொழிக்கொள்கை, தமிழகத்தில் சிங்க நடை போட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார். 
மத்திய அரசின் இந்த ஆலோசனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். 

Related Posts: