நாடு முழுவதும் உள்ள நடுநிலை வகுப்புகளில் இந்தி கட்டாயம் என புதிய தேசிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள தேசிய கல்வி கொள்கை கடந்த 1986ம் ஆண்டு உருவாக்கப்பட்டு பின்னர், 1992 ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்பின்னர் தேசிய கல்வி கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக புதிய தேசிய கல்வி கொள்கைக்கான பரிந்துரைகளை அளிக்க முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவை அமைத்தது. அந்த குழுவினர் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவை, புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் ஒப்படைத்தனர்.
அதில், தேசிய கல்வி ஆணையம் உருவாக்குவது, மும்மொழிக்கொள்கையை உருவாக்குவது மற்றும் தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வை தடுப்பது போன்ற பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மும்மொழி கொள்கையை, நாடு முழுவதும் நடுநிலை வகுப்பு முதல் அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹிந்தி கட்டாயம் அல்லாத மாநிலங்களில், இனி ஹிந்தி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.