உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீட்டு பட்டியலில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இதனையொட்டி அவர்களின் பதவிக்காலமும் ஐந்து முறை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீட்டு பட்டியலை தமிழக அரசு தற்போது அரசாணையாக வெளியிட்டுள்ளது. அதில் சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 95 வார்டுகள் ஆண்களுக்கும், 105 வார்டுகள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.