Authors
மகராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களான ராதாகிருஷ்ன விகே பட்டீல், அப்துல் சத்தார் (முன்னாள் மத்திய அமைச்சர்) ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதோடு பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. மகராஷ்டிர மாநிலத்தில் அக்கூட்டணி காங்கிரஸை துடைத்தெறிந்துள்ளது என்றே கூறலாம். பாஜக கூட்டணி 41 தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி 5 தொகுதிகளையும் வென்றது.
பாஜகவின் வெற்றி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை பாதிக்கும் விதமாக தற்போது மாறியுள்ளது. அம்மாநிலத்தின் காங்கிரஸ் மூத்த தலைவர் ராதாகிருஷ்ன விகே பட்டீல் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் அவர் அளித்துள்ளார். இவர் கடந்த மாதம் தான் தனது எதிர்கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல மற்றொரு காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அப்துல் சத்தார் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணையப்போவதாக அறிவித்துள்ளார்.
அப்துல் சத்தாரை போலவே காங்கிரஸில் இருந்து விலகிய ராதாகிருஷ்ன விகே பட்டீலும் பாஜகவில் இணைய உள்ளதாகவே தெரிகிறது. இந்த தகவல்கள் மாநில காங்கிரசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனை தொடர்ந்து மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக ராதாகிருஷ்ன விகே பட்டீலுடன் தொடர்பில் உள்ள 8 முதல் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் ஐக்கியமாக உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.