தேனியில் விலையில்லா மடிக் கணினி வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அடித்து இழுத்துச் சென்று கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2017 - 18ஆம் கல்வி ஆண்டில் படித்த மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மடிக் கணினி வழங்கப்படாததைக் கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கம் சார்பாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து தங்களின் கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் வழங்குவதற்கு சென்றனர். ஆனால் ஆட்சியரிடம் மனு வழங்குவதற்கு அனுமதிக்கப்படாததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் ஆர்ப்பாட்டத்தை கைவிடவில்லை. தொடர்ந்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது மறியலில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
credit Ns7.tv