செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் விவகாரத்தால் பிளவுபட்ட காங்கிரஸ்! August 06, 2019

Image
காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு நீக்கப்பட்ட நிலையில் பிரதான எதிர்கட்சியான காங்கிரஸுக்குள் இந்த விவகாரம் பிளவை ஏற்படுத்தியுள்ளது.
370வது பிரிவு நீக்கப்பட்டது இந்திய அரசியலமைப்பின் கருப்பு தினம் என்று காங்கிரஸ் தலைமை வர்ணித்துள்ள நிலையில் இந்த விவகாரத்தில் பாஜகவின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர்கள் சிலரே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

370வது பிரிவு நீக்கப்பட்டதற்கு எதிரான நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளதால் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் ராஜ்யசபா தலைமை கொறடாவுமான புவனேஸ்வர் கலிதா தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக புவனேஸ்வர் கலிதா தனது ராஜினா கடிதத்தில், “காங்கிரஸ் தலைமை இது தொடர்பாக என்னிடம் கொறடா உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டது, இது நாட்டு நலனுக்கு எதிரானது, அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்ல காங்கிரஸ் முயல்கிறது, என்னால் அதற்கு உடன்பட முடியாது” என்று எழுதியுள்ளார்.
மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவரான ஜனார்தன் திவேதியும் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். வரலாற்று பிழை ஒன்றை தற்போதைய அரசு சரிசெய்துள்ளது. சுதந்திர காலகட்டத்தின் போது தேச நலனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தவறு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து, கட்சியின் கருத்தல்ல என்றும் திவேதி குறிப்பிட்டார்.
இதே போல உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி சதார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் கூறுகையில், 370 பிரிவு நீக்கப்பட்டதற்கு எனது முழு ஆதரவு உள்ளது. இது வரலாற்றுசிறப்புமிக்க முடிவு, இதனை அரசியலாக்க கூடாது, ஒரு மக்கள் பிரதிநிதியாக இதனை வரவேற்கிறேன் என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான ஜெய்வீர் சிங்கும் அரசின் முடிவை வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதேபோல காங்கிரஸின் முன்னாள் எம்.பி தீபேந்தர் ஹூடா தனது ட்விட்டர் பதிவில், தேச ஒற்றுமைக்கு 370 சட்டப்பிரிவை நீக்குவது பயன்தரும். இது காஷ்மீர் மக்களுக்கும் நல்லதே. இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் போது அரசு அமைதியை கடைப்பிடிக்க வேண்டும்.
இதே போல முன்னாள் எம்.பியும் மகராஷ்டிர மாநிலத்தின் மூத்த தலைவருமான மிலிந்த் தியோரா , இந்த விவகாரம் அரசியலாக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு எது நன்மை தருகிறதோ அதனை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
credit ns7.tv