செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் விவகாரத்தில் அனைத்து விதிகளும் மீறப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு! August 06, 2019

credit ns7.tv
Image
ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ள விவகாரத்தில் அனைத்து விதிகளும் மீறப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 370 நீக்கம் மற்றும் அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அறிமுகப்படுத்தி பேசினார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் அவசர அவசரமாக இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விஷயத்தில் அனைத்து விதிகளையும் அரசு மீறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
ஜம்மு காஷ்மீர் மக்களின் உணர்வுகளை கவனத்தில் கொள்ளால், அந்த மாநிலம் குறித்த முக்கிய முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின் மீது பேசிய அக்கட்சியின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர். பாலு, பெரும்பான்மை இருக்கிறது என்பதால் மத்திய அரசு விருப்பம்போல் செயல்படுவதாக விமர்சித்தார். 
ஜம்மு காஷ்மீர் மக்களின் உணர்வுகளை அம்மாநில சட்டப்பேரவை மட்டுமே பிரதிபலிக்க முடியும் என்று தெரிவித்த டி.ஆர். பாலு, அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் வரை ஏன் பொறுமை காத்திருக்கக் கூடாது என கேள்வி எழுப்பினார். தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட உள்ள நிலையில், துணை நிலை ஆளுநர்களால் எவ்வாறு நிர்வாகத்தை நடத்த இயலும் என கேள்வி எழுப்பிய டி.ஆர். பாலு, முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக் குழு மட்டுமே மக்களின் தேவை அறிந்து ஒரு மாநிலத்தை நிர்வகிக்க முடியும் என்றார். 
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால், அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்த தகவலை அவைக்கு அளிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளதாக திமுக எம்.பி தயாநிதி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.