credit ns7.tv
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மசோதாவை, இன்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவு நீக்கம் மற்றும் அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதற்கான மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்தார். தொடர்ந்து பேசிய அவர், காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண, உயிரையும் கொடுக்கத் தயார் என கூறினார். ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தானும், சீனாவும் ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிவித்த அமித் ஷா, அந்த பகுதிகள் அனைத்தும் இந்தியாவுக்கு சொந்தமானவை என்றும் கூறினார்.
தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் பேசிய மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் அவசர அவசரமாக இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விஷயத்தில் அனைத்து விதிகளையும், அரசு மீறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
விவாதத்தில் பேசிய திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, பெரும்பான்மை இருக்கிறது என்பதால், மத்திய அரசு விருப்பம்போல் செயல்படுவதாக விமர்சித்தார். ஜம்மு காஷ்மீர் மக்களின் உணர்வுகளை அம்மாநில சட்டப்பேரவை மட்டுமே பிரதிபலிக்க முடியும் என்று தெரிவித்த டி.ஆர். பாலு, அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் வரை ஏன் பொறுமை காத்திருக்கக் கூடாது என கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தாலும், தமிழகத்திலும், கேரளாவிலும் ஒரு தொகுதியில் கூட பாஜகவால் வெற்றி பெற முடியாததற்கு, அறிவார்ந்த மக்கள் பாஜகவை ஏற்க மறுப்பதே காரணம் என டி.ஆர்.பாலு விமர்சித்தார்.
விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத், ஜெயலலிதாவின் பேச்சை சுட்டிக்காட்டி காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தார். கச்சத்தீவையும் மீட்டு இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என ரவீந்திரநாத் குமார் வலியுறுத்தினார். மாநிலங்களவையை போன்றே, மக்களவையிலும் காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா மீதான விவாதத்தில் அனல் பறந்தது.