வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

பாகிஸ்தானின் முடிவை மறுபரிசீலனை செய்ய இந்தியா வலியுறுத்தல்! August 08, 2019

ns7.tv
Image
தூதரக உறவை துண்டித்துக் கொள்ளும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. 
இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நடவடிக்கை பாகிஸ்தானுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பது ஆச்சரியம் அளிக்கக் கூடியது அல்ல என தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் எதிர்மறை உணர்வுடன் பாகிஸ்தான் செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள ரவீஷ் குமார், பாகிஸ்தான் தனது அதிருப்தியை வெளிப்படுத்துவதன் மூலம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுவதை நியாயப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார். 
ஜம்மு காஷ்மீர் தொடர்பான அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என அவர் கூறியுள்ளார். இந்திய அரசியல் சாசனம் எப்போதும் இறையாண்மைக்கு உட்பட்டது என தெரிவித்துள்ள வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், இதில் தலையிடும் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் தன்னிச்சையான முடிவு வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ள ரவீஷ் குமார், இவ்விஷயம் குறித்து மறு ஆய்வு செய்ய வலியுறுத்துவதாகக் கூறியுள்ளார். அதன் மூலமே, இருதரப்பு தொடர்புகளை நீடிக்கச் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.