சென்னையில் காவல் ஆய்வாளர் தாக்கியதாக கூறி, மனமுடைந்து தீக்குளித்த கூலித்தொழிலாளி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னயை அடுத்த புழல் விநாயகபுரம் பகுதியில், ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில், சீனிவாசன் என்ற பெயிண்டர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். இந்நிலையில், ஊரடங்கால் வேலையின்றி அவதிப்பட்ட சீனிவாசன், சரியாக வாடகை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளர் கூறியுள்ளார். ஆனால், வீட்டை காலி செய்ய மறுத்து காலம் தாழ்த்தி வந்தததால், சீனிவாசன் மீது வீட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், புழல் ஆய்வாளர் பென்ஷாம் மற்றும் போலீசார், வீட்டிற்கு சென்று சீனிவாசனை விசாரித்துள்ளனர். இச்சம்பவத்தினால் மனமுடைந்த சீனிவாசன், குடிபோதையில் தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதில் 50 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் அடைந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மாவட்ட நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தில், புழல் காவல் நிலைய ஆய்வளார் தன்னை மிரட்டி, நடுரோட்டில் அடித்ததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சீனிவாசன் இன்று உயிரிழந்தார். ஆய்வாளர் தாக்கியதாக சீனிவாசன் வாக்குமூலம் அளித்திருந்ததால், பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் பென்ஷாமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.