ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

​ராஜேந்திரபட்டிணத்தில் பழங்கால புத்தர் சிலை மாயம்..! September 16, 2018

Image

ராஜேந்திரபட்டிணத்தில் கடந்த 2007ல் கண்டெடுக்கப்பட்ட பழங்கால புத்தர் சிலை மாயமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த ராஜேந்திரபட்டிணம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாகும். ராஜராஜ சோழர் தனக்கு ஒரு ஆண்மகன் பிறக்க வேண்டும் என மனமுருகி இங்குள்ள பழமைவாய்ந்த சிவாலயத்தில் வழிபட்டதன் பயனாக அவருக்கு ஒரு மைந்தன் பிறந்தார் என்று கூறப்படுகிறது. இந்த ஊரின் பெயரைத் தழுவியே ராஜராஜ சோழன் தனது மகனுக்கு ராஜேந்திர சோழன் என்று பெயரிட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2007ம் ஆண்டு இக்கிராமத்தில் உள்ள வயல்வெளியில் இருந்து கிரானைட் கல்லால் வடிக்கப்பட்ட பழங்கால புத்தர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 98cm உயரமும், 56cm அகலமும் கொண்ட அச்சிலை 9ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என தெரியவந்தது. 

இந்நிலையில் அவ்வூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரான அருண் முத்துக்குமரன் என்பவர் 2007ல் கண்டெடுக்கப்பட்ட பழங்கால புத்தர் சிலை மாயமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.  2007ல் கண்டெடுக்கபப்ட்ட இச்சிலையின் புகைப்படம் மற்றும் விவரங்கள் வரலாற்று ஆய்வாளர்களான ஜம்புலிங்கம் மற்றும் அனந்தபுரம் கிருஷ்னமூர்த்தி ஆகியோரால் பாதுகாக்கப்பட்டு வருவதை அறிந்து அவர்களை தொடர்பு கொண்டு சிலையின் புகைப்படத்தை பெற்றுள்ளார். இச்சிலையின் புகைப்படம் மட்டுமே மிஞ்சியிருப்பதாகவும், இது தொடர்பாக வேறு ஆவணங்கள் ஏதும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஒரு அடையாளத்தை நாம் தவறவிட்டுவிட்டதாகவும், கலாச்சார சின்னங்களை பாதுகாக்க நாம் தவறுவது மிகவும் வருந்ததக்க செயல் என்றும் கூறிய அவர் இந்த சிலை குறித்த தகவல் கூட கிராமவாசிகள் அறியாமல் இருப்பது கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார்.

9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை திருடப்பட்டதா அல்லது வெளிநாடுகளுக்கு கடத்தி விற்கப்பட்டதா என்பது புரியாத புதிராக உள்ளது குறிப்பிடத்தக்கது.