வெள்ளி, 28 செப்டம்பர், 2018

சபரிமலை ஐயப்பன் கோயில் விவகார தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்த முக்கிய அம்சங்கள்! September 28, 2018

Image

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பில் தெரிவித்த முக்கிய அம்சங்கள்

ஆண், பெண் சமமானவர்கள் எனத் தெரிவித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மதங்களில் இரட்டை முறை கடைப்பிடிப்பது, பெண்களின் கவுரவத்தை பாதிக்கும் நடவடிக்கை எனத் தெரிவித்தார். மாதவிடாய் போன்ற உடல்ரீதியான மற்றும் உளவியல் ரீதியான காரணங்களைக் கொண்டு, பெண்களின் உரிமைகளை பறிக்க முடியாது எனவும், பெண்களை கோயில் வழிபாட்டுக்கு அனுமதிக்காமல் இருப்பதை, மதத்தின் முக்கிய அங்கமாக கருத முடியாது எனவும் தீபக் மிஸ்ரா கூறினார். 

கோயில், பொது இடங்களுக்கு செல்வதற்கு கடைப்பிடிக்க சாத்தியமில்லாத விதிமுறைகளை வகுத்து, கடைபிடிக்க கூறுவது, ஒருசாரரின் உரிமையை பறிக்கும் செயல் என தீபஸ் மிஸ்ரா தீர்ப்பில் குறிப்பிட்டார். பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் மத நம்பிக்கைகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்பதால், அவற்றை ரத்து செய்ய வேண்டுமெனக் கூறிய நீதிபதி சந்திரசூட், அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல்களும் தீண்டாமையே என தெரிவித்தார். 

ஐயப்ப பக்தர்களை தனிக்குறியீடாகவோ, அடையாளமாகவோ கருத முடியாது எனத் தெரிவித்த நீதிபதி ஆர்.எஃப். நரிமன், அவர்களின் வழிபாடும், இந்து மத வழிபாடுகளில் ஒன்றே எனக் குறிப்பிட்டார். வழிபாடு என்ற அடிப்படை உரிமையை தடுத்தால், அது பெண்களை உரிமையை பறிப்பதற்கு சமம் என நீதிபதி ஆர்.எஃப். நரிமன் தீர்ப்பில் தெரிவித்தார்.மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா, சபரிமலை கோயில் அரசின் நிதியுதவியில் இயங்குவது கிடையாது என்பதால், அங்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பாக திருவாங்கூர் தேவசம் போர்டு தான் முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டார்.  

இது, மத நம்பிக்கை சார்ந்த விவகாரம் என்பதால் நீதிமன்றம் தலையிடக்கூடாது எனக் கூறிய இந்து மல்கோத்ரா, ஐயப்ப பக்தர்கள் பலமான தனிப்பட்ட நம்பிக்கை கொண்டவர்கள் என்பதால் அதற்கு மதிப்பளிக்க வேண்டுமென தீர்ப்பில் தெரிவித்தார்.