ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கு: வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக உள்ளேன் - கருணாஸ் September 23, 2018

Image

காவல்துறை, முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸை அக்டோபர் 5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

கடந்த 16ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. கருணாஸின் பேச்சுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை சென்னை சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து கருணாஸை போலீசார் கைது செய்தனர். கருணாசுடன் செல்வநாயகம், நெடுமாறன், கார்த்திக் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேலும், அவரது வீட்டிற்கு வெளியே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். கைதுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், தம் மீதான வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள தயார் என தெரிவித்தார்.

தொடர்ந்து, கைதான எம்.எல்.ஏ கருணாஸிடம் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கருணாசுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

பின்னர், எழும்பூரில் உள்ள நீதிபதி குடியிருப்பு வளாகத்தில் உள்ள 13வது குற்றவியல் நீதிபதி கோபிநாத் இல்லத்தில் கருணாஸ் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவர் மீது போடப்பட்ட கொலை முயற்சி பிரிவு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதி கோபிநாத், கருணாஸை அக்டோபர் 5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து புழல் சிறையில் கருணாஸ் அடைக்கப்பட்டார். கருணாசுடன் கைது செய்யப்பட்ட நெடுமாறன், கார்த்திக் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸை, ஜாமீனில் விடுவிக்கக்கோரி நாளை மனு தாக்கல் செய்ய உள்ளதாக அவரது வழக்கறிஞர் அழகிரி தெரிவித்துள்ளார்.