பால் மற்றும் காய்கறிகள், பழங்களில் வேதிப்பொருள் கலப்படம் உள்ளதா என்பதை கண்டறிய புதிய முறையை மிக குறைந்த செலவில் பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் உருவாக்கியுள்ளார் .
அன்றாட உணவுகளில் கலப்படம் என்பது சாதாரணமான ஒன்றாகாகி விட்டது. உடல் நலனை கெடுக்கும் கலப்படங்களை கண்டறிந்து தடுப்பது அவசியமான தேவையாகிவிட்டது. காய்கறி, பழங்கள் என தொடங்கி குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் உட்கொள்ளும் பால் வரை அனைத்திலும் கலப்படம் என்ற நிலை தான் காணப்படுகிறது.
பாலில் உள்ள கொழுப்பு சத்தை நீக்கி எடுத்து விட்டு யூரியா கலந்த பாலை தனியார் நிறுவனங்கள் விற்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், கலப்படம் செய்யப்பட்ட பால் எது, கலப்படம் செய்யப்படாத இயற்கை தன்மை கொண்ட பால் எது? என அறிய புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி உள்ளார் சென்னை செம்மஞ்சேரி தனியார் கல்லுாரியில் நுண்ணுயிரியல் பயிலும் மாணவி ஹேமலதா.
சாதாரண வெள்ளைத்தாளை சிறு சிறு துண்டுகளாக்கி அதன் மீது சில ரசாயன மூலக்கூறுகளை ஒருங்கிணைத்து கண்டுபிடிக்கப்பட்ட கலவையை பரப்பி வெயில் இல்லாத இடத்தில் உலர வைக்கின்றார் ஹேமலதா. பின்னர் உலர்ந்த அந்த காகித துண்டை இயற்கை தன்மை கொண்ட பாலில் இடும் போது எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் காகிதம் இயல்பாக லேசான மஞ்சள் நிறத்திலே உள்ளது. ஆனால் யூரியா கலக்கப்பட்ட பாலில் சோதிக்கும்போது லேசான மஞ்சள் நிறத்தில் உள்ள காகிதம் அடர் மஞ்சள் நிறத்திற்கு மாற்றமடைகிறது
தான் கண்டுபிடித்து இருக்கக்கூடிய இந்தப் பொருளுக்கான செலவு வெறும் 20 பைசா முதல் 50 பைசா வரை மட்டுமே என தெரிவிக்கிறார் ஹேமலதா. ஹேமலதாவின் கண்டுபிடிப்பு இந்திய அளவில் பொறியியல் துறை சார்ந்த சிறந்த கண்டுபிடிப்பிற்கான விருதையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தான் உருவாக்கியுள்ள இந்த கண்டுபிடிப்பு 45 நாட்கள் வரை உபயோக தன்மையில் இருக்கும் என்றும், அதை ஆறு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யும் சோதனையில் ஈடுபட்டுவருவதாகவும் மாணவி ஹேமலதா தெரிவித்துள்ளார். தமது கண்டுபிடிப்பை மக்கள் பயன்பாட்டிற்கு சந்தைப்படுத்த அரசு உதவி செய்ய வேண்டுமென ஹேமலதா கோரிக்கை விடுத்துள்ளார்.