செவ்வாய், 25 செப்டம்பர், 2018

மாணவி சோபியா மற்றும் அவரது தந்தை சாமி ஆகியோர் மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜர்! September 25, 2018

Image

பாஜக குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாணவி சோபியா மற்றும் அவரது தந்தை சாமி ஆகியோர் மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜராகினர்.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் கடந்த செப்டம்பர் 3ம் தேதி, ஆராய்ச்சி மாணவி சோபியா பயணம் செய்தார். அப்போது, விமானத்தில் பயணித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசையை நோக்கி, பாஜகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். இதுகுறித்த புகாரில் கைது செய்யப்பட்ட சோபியா பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையே சோபியா கைது விவகாரத்தில் மனித உரிமை மீறல் நடைபெற்றதாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் அவரது தந்தை மனு தாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து நெல்லை வண்ணாரப்பேட்டை அரசு சுற்றுலா விருந்தினர் மாளிகையில் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் முன்பாக சோபியா, அவரது தந்தை சாமி, புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் திருமலை ஆகியோர் இன்று ஆஜராகினர்.

விசாரணையின் போது, மாணவியை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று இரவு 8.30 மணி வரை எப்படி விசாரணை நடத்தலாம் என, காவல்துறை ஆய்வாளரிடம் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

சோபியாவின் தந்தை அளித்த புகார் தொடர்பாக காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யவும் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.