புதன், 19 செப்டம்பர், 2018

தென்கொரிய அதிபரை விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார் வடகொரிய அதிபர்! September 18, 2018

Image

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, மூன்று நாள் அரசுமுறைப்பயணமாக தென்கொரிய அதிபர் மூன்-ஜே- இன், வடகொரியா சென்றடைந்தார். வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் விமான நிலையத்திற்கே சென்று, மூனை வரவேற்றார்

1953ம் ஆண்டு கொரிய போருக்குப்பின், சுமார் 65 ஆண்டுக்கால இடைவெளிக்குப்பின், இருநாடுகள்  இடையே மீண்டும் புது உறவுக்கு அடித்தளம் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம், வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் முதல்முறையாக தென்கொரிய அதிபர் மூன்-ஜே- இன்னை சந்தித்து பேசினார். இதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூரில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப்- கிம் ஜான் உன் சந்திப்பு நடந்தது.  இந்நிலையில், மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக தென்கொரிய அதிபர் மூன்-ஜே- இன், இன்று வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் உள்ள சுனான் விமானம் நிலையம் சென்றடைந்தார்.

கிம் ஜான் உன், தனது மனைவியுடன் சென்று மூனை நேரில் வரவேற்றார். வெளிநாட்டு தலைவர் ஒருவரை, விமான நிலையம் சென்று, கிம் வரவேற்பது இதுவே முதல்முறையாகும். விமான நிலையத்தில் தென்கொரிய அதிபருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட, அணு ஆயுத திட்டங்களை வடகொரியா கைவிட முன்வந்துள்ள நிலையில், இது குறித்து இரு தலைவர்களும் முக்கியமாக விவாதிக்கவுள்ளனர். மேலும் பொருளாதார ஒத்துழைப்பு, தொழில் முதலீடுகள் குறித்தும் இரு கொரிய தலைவர்களும் விவாதிக்கவுள்ளனர். தென்கொரிய அதிபருடன், சாம்சங் உள்ளிட்ட அந்நாட்டு முன்னணி நிறுவனங்களின் தலைவர்களும் சென்றுள்ளனர். கடந்த சில மாதங்களாக, அமெரிக்கா- வடகொரியா இடையே மீண்டும் கசப்புணர்வு ஏற்பட்டுள்ள வேளையில், மூனின் இந்த வருகை,   அவ்விருநாடுகள் இடையே மீண்டும் பேச்சுவார்த்தைக்கு பாதை அமைத்துக்கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.