அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1994ம் ஆண்டு அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தொழுகை நடத்துவதற்கு மசூதிகள் அவசியமான ஒன்று அல்ல என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி அசோக் பூஷண், நீதிபதி அப்துல் நஷிர் அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
முதலில் தீர்ப்பை வாசித்த நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி அசோக் பூசண், அனைத்து மதத்தினரின் உரிமைகளையும் மதிக்க வேண்டும் என்றனர். 1994ம் ஆண்டு இருமத வழிபாட்டை ஒப்பிட்டு கூறியது ஏற்புடையதல்ல என்றும் நீதிபதிகள் கூறினர்.
1994ல் அரசியல் சாசன அமர்வானது, இஸ்லாமியர்கள் வழிபட மசூதி தேவையில்லை, எங்கு வேண்டுமெனாலும் நமாஸ் செய்யலாம் எனக்கூறியது வெறும் கருத்தே தவிர தீர்ப்பு அல்ல என்றும் தெரிவித்தனர். அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவை இல்லை என்றும் தெரிவித்தனர்.
பின்னர் தீர்ப்பை வாசித்த அப்துல் நசீர், இரு நீதிபதிகளின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தார். ஒரு மதத்தின் நம்பிக்கை மற்றும் நடைமுறையை மதிக்க வேண்டும் என்றும் அப்துல் நசீர் கூறினார். இந்த வழக்கு அக்டோபர் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.