தெலங்கானா அரசு தேர்வாணையம் நடத்திய போட்டித்தேர்வுக்கான எழுத்துத் தேர்வு அறைக்குள் நுழைய திருமணமான பெண்களின் தாலிகளை கழற்றச் செய்ததால் கணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் கிராம வருவாய் அலுவலர்களுக்கான (VRO) பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அம்மாநில அரசு தேர்வாணையத்தால் (TSPSC) நேற்று நடத்தப்பட்டது.
700 இடங்களுக்காக நடத்தப்பட்ட இப்போட்டித்தேர்வில் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர். மாநிலத்தின் பல பகுதிகளிலும் சுமூகமாக நடத்தப்பட்ட இத்தேர்வு ஒரே ஒரு தேர்வு மையத்தில் மட்டும் அதிகாரிகளின் குளறுபடியால் சலசலப்பை ஏற்படுத்தியது.
தெலங்கானாவின் மேதக் மாவட்டத்தில் உள்ள நரசாபூர் நகரின் லிட்டில் பிளவர் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் தேர்வெழுத வந்த திருமணமான பெண்கள் தாலிகளை கழற்றி வைத்துவிட்டே தேர்வறைக்குள் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.
அதிகாரிகளின் இந்த அறிவிப்பால் கடும் அதிர்ச்சிக்குள்ளான பெண்கள் செய்வதறியாது திகைத்தனர். இருப்பினும் அதிகாரிகள் உறுதியாக இருந்ததால் அப்பெண்களில் சிலர் தங்களுடன் வந்திருந்த கணவர்களிடம் தாலியை கழற்றிக்கொடுத்துவிட்டு உள்ளே சென்றனர்.
தங்க நகைகளில் எலக்ட்ரானிக் சாதனங்கள் மறைத்து வைக்கப்பட்டு அதன் மூலம் காப்பி அடிக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுவதால் தங்க நகைகளை தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படக்கூடாது என்பது விதிமுறை என அவர்கள் விளக்கமளித்தனர்.
இதனையடுத்து மேலும் சில திருமணமான பெண்களும் அந்த தேர்வு மையத்திற்கு வந்தபோது அதிகாரிகளின் தரப்பில் இருந்து அதே வலியுறுத்தல் கொடுக்கப்பட்டதையடுத்து பெண்களும், அவர்களின் கணவர்களும் அதிகாரிகளை கண்டித்து வாக்குவாதம் செய்தனர். இதன் பின்னரும் அதிகாரிகள் அதையே கூறியதையடுத்து கணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு திரண்ட தொலைக்காட்சி நிருபர்களிடம் இதனை குறிப்பிட்டு கணவர்கள் பேட்டியளித்தனர். பின்னர் அங்கு காவலுக்கு இருந்து போலீசாரிடம் முறையிட்டதையடுத்து, அவர்கள் தேர்வு அதிகாரிகளுடன் பேசிய பின்னர் தாலிகளை கழற்றாமலே தேர்வு அறைக்குள் பெண்களை அனுமதித்தனர்.
இது தொடர்பாக விகாராபாத் பகுதியில் இருந்து வந்திருந்த சிவக்குமார் என்பவர் பேசும்போது, எனது மனைவி மதுமதி தேர்வறைக்குள் தாலியை கழற்றிய பின்னரே அனுமதிக்கப்படுவார் என்று அதிகாரிகள் கூறினர், ஆனால் தாலியை கழற்றுவது என்பது ஹிந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலானதுடன், அமங்கலமாக கருதப்படுவதால் அதற்கு நாங்கள் உடன்படவில்லை என்றார்.
இது தொடர்பாக தேர்வாணையத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, அனைத்து தேர்வு அதிகாரிகளுக்கும் தேர்வுக்கு முன்னர் நடத்தப்பட்ட அறிவுரைக்கூட்டத்தில் போதுமான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. தங்கம் போன்ற பொருட்கள் அனுமதிக்கப்படக்கூடாது என்றாலும் தாலிக்கு அனுமதி மறுக்கக்கூடாது என்பது விளக்கப்பட்டது. இருப்பினும் குறிப்பிட்ட தேர்வு மைய அதிகாரி கவனக்குறைவாக செயல்பட்டதால் இத்தவறு நிகழ்ந்திருக்கலாம் என தெரிவித்தார்.
தேர்வு எழுத வந்த எந்த பெண்களும் திருப்பி அனுப்பப்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும் இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அவர் கூறினார்.