கனமழை காரணமாக ஹிமாச்சல் பிரதேசத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களாக அங்கு பெய்து வரும் கனமழைக்கு அங்குள்ள 12 மாவட்டங்களில் 10 மாவட்டங்கள் கடும் சேதம் அடைந்துள்ளதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சுற்றுலா தலங்களான குலு, மணாலி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குலு பகுதியில் ஆற்றங்கரையோரம் உள்ள வீடுகள் மற்றும் உணவகங்களுக்குள் வெள்ளநீர் புகுந்ததால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதேபோல் வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களையும், ஹெலிகாப்டர் மூலம் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இதன்காரணமாக வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மலையேற்ற குழுவினர் பயிற்சி மேற்கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை நீடிக்கும் எனவும், பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.