வெள்ளி, 14 செப்டம்பர், 2018

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக அமைச்சரவையின் தீர்மானம்: ஆளுநர் புரோஹித் கடிதம் September 14, 2018

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சருக்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடிதம் எழுதியுள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 28 ஆண்டுகளாக சிறையிலுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக, ஆளுநருக்கு பரிந்துரைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பதாக சமீபத்தில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இதனை அடுத்து, கடந்த 9ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய தமிழக அமைச்சரவை, 7 பேரை விடுவிப்பது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு பரிந்துரை செய்தது.

இந்நிலையில், இதுதொடர்பான விவகாரத்தில், சட்ட சந்தேகங்களை போக்கவும், ஆலோசனை வழங்கவும் கேட்டு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையடுத்து, ஆளுநருக்கு மத்திய உள்துறை அமைச்சர் சார்பில், விரைவில் பதில் அனுப்பப்படும் என கூறப்படுகிறது. எனினும், 7 பேர் விடுதலை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் எழுந்தால், மத்திய சட்ட அமைச்சகத்தின் கருத்தை கேட்டு, உள்துறை அமைச்சர் சார்பில் தமிழக ஆளுநருக்கு பதில் அனுப்பப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.