மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரையான Saridon உள்ளிட்ட 328 மருந்துகளின் உற்பத்திக்கும், விற்பனைக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் தடைவிதித்துள்ளது.
அதிகம் பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மருந்துகள் உட்பட 349 மருந்துகள் உட்கொள்ள தகுதியற்றவை என கூறி அவற்றின் பயன்பாட்டுக்கு மத்திய அரசு 2016ம் ஆண்டு தடைவிதித்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சம்பந்தப்பட்ட மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள், உச்சநீதிமன்றத்தை நாடின. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய மருந்து தொழில்நுட்ப ஆலோசனை கழகத்திற்கு உத்தரவிடப்பட்டது.
அதுதொடர்பான ஆய்வில், 328 மருந்துகளில் வேதி பொருட்களின் சேர்க்கை விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை எனவும், அந்த வகை மருந்துகளால், மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தொடர் ஆய்வுகளுக்கு பிறகு தற்போது 328 மருந்துகளை தடை செய்வதாக அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில், D Cold Total, Corex உள்ளிட்ட சளி நிவாரணி மருந்துகள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று மருந்து தொழில்நுட்ப ஆலோசனை கழகத்தின் ஆய்வில் தெரியவந்ததை அடுத்து, அவற்றிற்கு தடை விதிக்கப்படவில்லை.