ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

கருணாஸ்: சர்ச்சை பேச்சு முதல் சிறை சென்றது வரை! September 23, 2018

Image


முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸின் சர்ச்சை பேச்சு முதல் சிறை சென்றது வரை நடந்த சம்பவங்கள்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16-ஆம் தேதி முக்குலத்தோர் புலிப்படை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதன் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ், முதல்வர் பழனிசாமி, காவல்துறையினர் மற்றும் வேற்று சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது.  முதல்வர், போலீசாரை அவதூறாகப் பேசிய புகாரில் கருணாஸ் பேசிய வீடியோவை ஆதாரமாகக் கொண்டு அவர் மீது கடந்த 20-ஆம் தேதி 8 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

கருணாஸின் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார், தமிழிசை, கமல்ஹாசன், சரத்குமார், கிருஷ்ணசாமி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். தைரியமிருந்தால் கருணாஸ் தன்னை அடித்துப் பார்க்கட்டும் என சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் சவால் விட்ட நிலையில், கடந்த 21-ஆம் தேதி சாலி கிராமத்தில் உள்ள கருணாஸ் வீட்டை முற்றுகையிட்ட நாடார் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். அதே நாளில் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ் சில சாதிகள் பற்றி பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், தம் மீது தவறு இருந்தால் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க தயார் என்றும் கூறினார்.  

கடந்த ஞாயிற்றுக்கிழமை கருணாஸ் சர்ச்சையாக பேசிய நிலையில் ஒரு வாரம் நடந்த களேபரத்தை தொடர்ந்து இன்று காலை சாலி கிராமத்தில் கருணாஸ் உள்ளிட்ட 4 பேரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். எழும்பூர் குற்றவியல் நீதிபதி கோபிநாத் இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கருணாஸுக்கு அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Posts: