
உதகை – கேத்தி இடையே இயக்கப்படும் சிறப்பு மலை ரயில் சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது
நாடு முழுவதும் ரயில்வே துறை சார்பில் சுற்றுலா விழா கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக உதகையில் இருந்து கேத்தி வரை சிறப்பு ரயில் இன்று இயக்கப்பட்டது. யுனெஸ்கோவின் பாரம்பரிய அந்தஸ்து பெற்ற மலை ரயிலில் பயணிக்க முதல் வகுப்பில் 400 ரூபாயும், இரண்டாம் வகுப்பிற்கு 300 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. உதகையில் இருந்து புறப்படும் இந்த ரயில் லவ்டேல் வழியாக கேத்தி சென்றடைகிறது.
சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக கேத்தி பகுதியில் அரை மணி நேரம் ரயில் நிறுத்தப்படுகிறது. அங்கு சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு உணவுகள் வழங்கப்பட்ட பிறகு, கேத்தியில் இருந்து புறப்பட்டு உதகை வந்தடைகிறது. உதகை-கேத்தி இடையே இயக்கப்பட்டுள்ள இந்த மலை ரயில் சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பாலங்கள், குகைகள் மற்றும் இயற்கை காட்சிகளை காண முடிவதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.