ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

கேரளாவில் மீண்டும் தொடங்கிய பருவ மழை; முல்லைப் பெரியாறு அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு! September 30, 2018

Image

கேரளாவில் பருவ மழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனால், முல்லை பெரியார் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 2 ஆயிரத்து 624 கனஅடியில் இருந்து 3 ஆயிரத்து 583 கனஅடியாக அதிகரித்துள்ளது. 

கடந்த 2 நாட்களில் அணையின் நீர்மட்டம், 125 அடியிலிருந்து 127 அடியாக உயாந்துள்ளது. மழை தொடருவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், அணை விரைவில் 142 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் விநாடிக்கு ஆயிரத்து 360 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முதல்போக சாகுபடியில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அணை நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பருவ மழை காரணமாக வைகை அணைக்கான நீர் வரத்து 2 ஆயிரத்து 475 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீர் மட்டம் 56.43 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து ஆயிரத்து 360 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தேனி மாவட்ட மலை பகுதிகளான வருசநாடு, வெள்ளிமலை, மேகமலை உள்ளிட்டவற்றில் கடந்த இரண்டு தினங்களாக இரவில் விடிய விடிய மழை பெய்ததை அடுத்து, வைகையின் பிறப்பிடமான மூல வைகை ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக மூல வைகை ஆறு வறண்டு கிடந்த நிலையில் தற்போது வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதைக் கண்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தற்போதைய மழையால், குடிநீருக்காக மூல வைகையை மட்டும் நம்பியிருந்த 100 க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் நிலவி வந்த குடிநீர் பஞ்சம் தீர்ந்துள்ளது.

கேரளாவின் முணாரில் பெய்து வரும் கனமழையால் மாட்டுப்பட்டி அணை 2வது முறையாக நிரம்பியுள்ளது. 162 அடி கொள்ளவு கொண்ட மாட்டுப்பட்டி அணை, கடந்த மாதம் நிரம்பியதை அடுத்து, ஆகஸ்ட் 14ம் தேதி திறக்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டாவது முறையாக அணை மீண்டும் நிரம்பியுள்ளது. அணையின் நீர்மட்டம் 162 அடியை எட்டியுள்ளதால், ஒரு ஷட்டர் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றபட்டு வருகிறது. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் இதணைக் கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.