ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

​எதிர்ப்பு வலுத்ததால் சிங்கப்பூரில் பெற்ற மருத்துவ சிகிச்சைக்கான தொகையை அரசிடம் திருப்பியளித்த நிதியமைச்சர்! September 30, 2018


அரசுப் பணத்தில் சிங்கப்பூரில் எடுத்துக்கொண்ட மருத்துவ சிகிச்சைக்கான தொகையை எதிர்ப்பு காரணமாக மீண்டும் அரசிடமே திருப்பி ஒப்படைத்துள்ளார் அமைச்சர் ஒருவர்.

சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர மாநில அரசின் நிதியமைச்சராக இருப்பவர் யனமலா ராம கிருஷ்னுடு, இவருக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூர் சென்று அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் பல் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு திரும்பினார்.
Image

இந்த சிகிச்சைக்காக அவர் செலவிட்ட 2.88 லட்ச ரூபாய் தொகையை ஏழைகளுக்கு சுகாதார சேவையளிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட Dr.NTR வைத்திய சேவா மருத்துவக்காப்பீடு திட்டத்தின் கீழ் அவர் திருப்பப்பெற்றுக்கொண்டார் என்று கூறப்படுகிறது.

ஆந்திர சட்டசபையில் இந்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய நிதியமைச்சர் யனமலா ராம கிருஷ்னுடு, ஆந்திர மாநிலத்தின் நிதிப்பற்றாக்குறை 24,205 கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்படுவதாக தெரிவித்தார்.

அதே போல, கடந்த தேர்தலின் போது அவர் தனக்கு 9 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் தகவல் தெரிவித்திருந்தார்.

மாநில அரசின் நிதிப்பற்றாக்குறை இந்த அளவிற்கு இருக்கும் சூழலில், பணக்காரராக விளங்கும் நிதியமைச்சர் யனமலா ராம கிருஷ்னுடு தனக்காக மருத்துவ சிகிச்சைக்கான தொகையை ஏழைகளுக்கான மருத்துவக்காப்பீடு திட்டத்தின் இருந்து பெற்றுக்கொண்டதால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார்.

அமைச்சரின் இந்த செயலால் பொதுமக்கள், எதிர்கட்சியினர் பலரும் அதிருப்தி தெரிவித்து விமர்சித்து வந்த நிலையில், அரசிடம் இருந்து சிகிச்சைக்காக பெற்ற 2 லட்சத்து 88 ஆயிரத்து 823 ரூபாயை அவர் மீண்டும் அரசின் கருவூலத்தில் செலுத்தியுள்ளார்.