சனி, 15 செப்டம்பர், 2018

7 பேர் விடுதலை தொடர்பாக அறிக்கை அனுப்பியதாக வெளியான செய்தி தவறானது: ஆளுநர் மாளிகை விளக்கம் September 15, 2018

ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுவிப்பது தொடர்பாக அரசியல் சாசனத்தின் படி நேர்மையான முடிவு எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுவிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையை பெற அனுப்பப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி  தவறு என குறிப்பிட்டுள்ளது. 

சில ஊடகங்கள், யூகத்தின் அடிப்படையில் ராஜிவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பாக விவாதங்கள் நடத்தி வருவதை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இதுதொடர்பாக எவ்வித அறிக்கையும் மத்திய அரசுக்கு அனுப்பப்படவில்லை எனவும் தெளிவுப்படுத்தியுள்ளது. 

இவ்வழக்கானது மிகவும் சிக்கலானது மட்டுமின்றி, அரசியல் சாசனம், சட்டம், நிர்வாக ரீதியில் அணுகக்கூடிய வழக்கு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின்படி தமிழக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பான கோப்புகள், செப்டம்பர் 14ல் தான் ஆளுநர் மாளிகைக்கு வந்ததடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக தேவையான ஆலோசனைகளை, தேவையான நபர்களிடம் உரிய நேரத்தில் பெறப்படும் எனவும், அரசியல் சாசனத்தின்படி, நேர்மையான மற்றும் நியாயமான முறையில் உரிய முடிவு எடுக்கப்படும் என விளக்கம் அளித்துள்ளது.
Image

Related Posts: