ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

இந்தோனேசியாவை உலுக்கிய சுனாமி தாக்குதல்: பலர் உயிரிழப்பு! September 30, 2018

Image

இந்தோனேசியாவில் நிலநடுக்கம், மற்றும் சுனாமி தாக்குதலில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டின் பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் தாக்கத்தை, அத்தனை எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. இந்தியா, ஆஸ்திரேலியா என 14 நாடுகளில் பெரும் உயிரிழப்புகளையும், சேதத்தையும் ஏற்படுத்திய அந்த சுனாமி தாக்குதலில் இரண்டரை லட்சம் பேர் உயிரிழந்தனர். பல லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். 21-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான சுனாமி என வல்லுநர்கள் தெரிவித்தனர். 

இந்நிலையில், வடக்கு இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில், கடந்த 28-ம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், 380க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ரிக்டர் அளவுகோளில் 7.5 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறினார். நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தோனேசியா வானிலை மையம், 3 முதல் 4 மீட்டர் அளவுக்கு, சுனாமி அலை வரலாம் என்று எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அந்த எச்சரிக்கையை வானிலை மையம் திரும்பப் பெற்றபோது தான், இந்தோனேசியாவின் சுலவேசி தீவு பகுதியை சுனாமி தாக்கியது. இதனால் பாலு மற்றும் டோங்க்லா உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிப்படைந்தன. 

எதிர்பாராத இந்த சுனாமி தாக்குதலில் 10 அடி உயரத்திற்கு எழுந்த ஆழிப்பேரலைகள், கடலோர பகுதிகளை வாரி சுருட்டியது. குடியிருப்புகள், கோவில்கள், மருத்துவமனை என்று ஒன்றுவிடாமல் அனைத்தும் தரைமட்டமானது. இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்த இந்தோனேசியா தேசிய பேரிடர் மீட்பு படை, தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், 384 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாலும், காயமடைந்துள்ளதாலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பசிபிக் அக்னி வளையப் பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியாவில், நிலநடுக்கம் ஏற்படுவதும், சுனாமி தாக்குவதும் அவ்வபோது நிகழ்ந்து வரும் ஒன்றாக மாறியுள்ள நிலையில், அனைத்தையும் மறந்து சகஜநிலைக்கு திரும்புவது அம்மக்களின் இயல்பு, அந்தவகையில், இந்த தாக்குதலில் ஏற்பட்ட வலிகளில் இருந்தும், அம்மக்கள் மீள்வார்கள் என நம்புவோம்.