செவ்வாய், 18 செப்டம்பர், 2018

கோவாவில் ஆட்சியமைக்க உரிமை கோரும் காங். என்ன முடிவெடுப்பார் ஆளுநர்? September 18, 2018

கோவாவில் ஆட்சியமைக்க காங்கிரஸ் உரிமை கோரியுள்ள நிலையில் அது குறித்து விவரமாக இங்கு காணலாம் .

"ஆட்சி அமைப்பதற்கு தேவையான எண்ணிக்கை எங்களிடம் உள்ளது. ஐந்து ஆண்டுகள் பணியாற்றுவதற்காகத் தான் மக்கள் எங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இப்போது அரசாங்கம் எப்படி நடக்கிறது என்பது மக்களுக்கு தெரியும். இந்த அரசாங்கம் செயல்பட முடியாத நிலையில் எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கலாம்.”

பனாஜியில் இருக்கும் ராஜ்பவனில் மனு அளித்து விட்டு கோவா சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் சந்திரகாந்த் காவேல்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்துகள் இவை. கடந்த 2017ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவா மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 17 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் 13 இடங்களை வென்றிருந்த பாஜக சிறிய கட்சிகளின் உதவியோடு ஆட்சி அமைத்தது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் மீண்டும் கோவா முதல்வராக பொறுப்பேற்றார். ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும் அதிகாரத்தை பயன்படுத்தி ஆட்சியமைத்ததாக எதிர்க்கட்சிகள் பாஜகவை விமர்சித்தன. 

ஆனால் ஆட்சியமைக்கத் தேவையான முயற்சிகளை எடுக்காமல் பாஜகவிடம் ஆட்சியை காங்கிரஸ் பறிகொடுத்து விட்டது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். 

கடந்த மே மாதம் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் பின் காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க உரிமை கோரின. ஆனால் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்த பாஜகவை ஆட்சியமைக்க அழைத்தார் ஆளுநர். அதனை சுட்டிக் காட்டி கோவாவிலும் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமென கோரியது காங்கிரஸ். ஆனால் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்கவே அந்தப் பிரச்சனை அப்போதைக்கு அடங்கியது. 

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மருத்துவ சிகிச்சைக்காக எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமென காங்கிரஸ் கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. இப்போது ஆட்சியிலிருக்கும் அரசு செயல்பட முடியாத நிலையில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. 

முதல்வர் பாரிக்கர் உடல் நலமில்லாமல் இருக்கும் நிலையில் அவரது பணிகளை அமைச்சரவை சகாக்கள் யாரும் மேற்கொள்வதில்லை எனவும் காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. ஆனால் முதல்வர் செயல்பட முடியாத நிலையில் இருக்கும் போது எதிர்க்கட்சியை ஆட்சியமைக்க அழைக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் யாரும் ஆளுநரை சந்திக்காத நிலையில் காங்கிரஸின் மனு மீது ஆளுநர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒரு வேளை ஆளுநர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் காங்கிரஸ் கட்சி நீதிமன்றத்தை நாடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இப்போதைக்கு  ஆளுநர் முடிவைப் பொறுத்தே அடுத்த கட்ட நகர்வுகள் அமையும் எனவும் கூறப்படுகிறது.