இந்தியாவின் தீவிரவாத தடுப்பு சட்டங்கள் என்னென்ன, அவை எவ்வாறு கால ஓட்டத்தில் பரிணாமம் பெற்றுள்ளன என்பது குறித்து இத்தொகுப்பில் காணலாம்.
TADA:
பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் [Terrorist and Disruptive Activities (Prevention)] சுருக்கமாக ‘தடா’ என்றழைக்கப்படும் இச்சட்டம் 1987ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் நிலவிய தீவிரவாத செயல்களை தடுக்கும் பொருட்டு முதலில் அம்மாநிலத்தில் பயன்படுத்தப்பட்ட இச்சட்டம், பின்னர் காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு பின்னர் பல்வேறு மாநில அரசாங்கங்களாலும் பயன்படுத்தப்பட்டது.
இச்சட்டத்தால் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை அனுமதி கிடைப்பது சுலபமல்ல. கைது செய்யப்படுபவர்கள் காலவரையின்றி சிறையில் அடைக்கவும், அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.
இச்சட்டப்படி கைது செய்யபட்டோர் காவல் அதிகாரியின் முன்னிலையிலேயே குற்ற செயலை ஒத்துக்கொள்ளவேண்டும், இதன் பொருட்டு அவர்களின் துன்புறுத்தலில் நீதிமன்றம் தலையீடாது. அவர் ஒத்துகொண்டதையே சாட்சியாக நீதிமன்றம் எடுத்துக்கொள்ளும். மேலும் இது தொடர்பான வழக்குகளை விசாரிக்க பிரத்யேக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
1993ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தொடர்குண்டுவெடிப்பு நிகழ்வு குறித்த வழக்கின் விசாரணை தடா நீதிமன்றமே விசாரித்து தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது. தவறாக பயன்படுத்தப்பட்ட காரணத்தால் இச்சட்டம் பின்னர் திரும்பப்பெறப்பட்டது.
முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதான பேரரிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் இந்தச்சட்ட பிரிவிலேயே கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
POTA:
1999ஆம் ஆண்டு நேபாளத்தில் இருந்து டெல்லி வந்ந்துகொண்டிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஆஃப்கானிஸ்தானின் காந்தகாருக்கு தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம், 2001ல் நடைபெற்ற பாராளுமன்ற தாக்குதல் போன்ற சம்பவங்களுக்கு பின்னர் கடுமையான தீவிரவாத தடுப்பு சட்டத்திற்கான தேவை ஏற்பட்ட போது 2002ல் இயற்றப்பட்டதே பயங்கரவாத செயல்களை தடுக்கும் சட்டமான பொடா (Prevention of Terrorism Act - POTA).
தடா போய் பொடா வந்தது என்ற வகையில் இதுவும் பல அதிகாரங்களை வாரிவழங்கிய ஒரு சட்டமாகவே திகழ்ந்தது. தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவராக சந்தேகிக்கப்படும் ஒரு நபரை சிறப்பு நீதிமன்றத்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலே 180 நாட்கள் வரை இச்சட்டத்தின் கீழ் அடைக்க இயலும். தடாவில் இருப்பதைப் போலவே இச்சட்டத்திலும் கைது செய்யப்பட்டோர் காவல் அதிகாரியின் முன்னிலையிலேயே குற்ற செயலை ஒத்துக்கொள்ளவேண்டும், இதுவே சாட்சியமாகவும் கருதப்படும். இதன் பொருட்டு அவர்களின் துன்புறுத்தலில் நீதிமன்றம் தலையீடாது மேலும் குற்றச்செயலை ஒத்துக்கொண்ட பின்னர் மீண்டும் அந்த நிலையிலிருந்து பிறழ இயலாது.
தடா போலவே பல மாநிலங்கள் இச்சட்டத்தினையும் தவறாக பயன்படுத்தியதால் மிக விரைவாகவே 2004ல் திரும்பப்பெறப்பட்டது. மதிமுக பொதுச்செயலாளரான வைகோ தடா மற்றும் பொடா சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டவர் என்பது கவனிக்கத்தக்கது.
UAPA:
கடந்த 2004ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தினை (1967) வலுப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்தது. 2008 மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் 2008-லும், 2012லும் இச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டுவது, தீவிரவாத அமைப்புகளில் அங்கம் வகிப்போர், உதவி செய்வோர் கடுமையாக தண்டிக்கும் வகையிலான சட்டமாக இது உருவெடுத்தது.
பொருளாதார பாதுகாப்பு, இந்திய ரூபாய் நோட்டுகளை கள்ளத்தனமாக அச்சடிப்பது, ஆயுதங்கள் கொள்முதல் ஆகியவையும் இச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத நடவடிக்கைகளாக கருத்தாக்கம் செய்யப்பட்டன.