
திருச்சி சோமரசம்பேட்டையில் தந்தை பெரியாரின் சிலையை சேதப்படுத்திய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் பெரியார் சிலையை 1991-ஆம் ஆண்டு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி திறந்துவைத்தார். பெரியார் கைத்தடியுடன் நிற்கும் முழு உருவச் சிலையாக இது இருந்துவந்தது.
இந்த பெரியார் சிலையில் இருந்த கைத்தடி உடைந்து கிடந்ததைக் கண்ட திராவிடர் கழகத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டுமெனக் கோரியுள்ள அவர்கள், கண்டன ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்துள்ளனர். புறக்காவல் நிலையம் முன்பே நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, சென்னை சிம்சன் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது காலணி வீசி அவமதிப்பு செய்ததை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பெரியாரின் சிலையை அவமதிப்பு செயலை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சென்னை அண்ணாசாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பெரியார் சிலை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைதொடர்ந்து, தந்தை பெரியார் சிலை மீது செருப்பு வீச்சு என்பது அரக்கத்தனமான செயல் எனவும், இதனை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டிருந்தார். மேலும், இதுதொடர்பாக யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஜாதி, மதத்தின் பெயரால் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.