
தமிழகத்தில் நடப்பாண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை 12 சதவீதம் அதிகமாகப் பொழியும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், அடுத்த இரு தினங்களுக்கு தென் தமிழகத்தின் அநேக இடங்களிலும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்தார்.
குமரிக் கடல், தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத் தீவில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசும் என்றும், கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும் அவர் எச்சரித்தார். எனவே, மீனவர்கள் நாளை மாலை வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். மேலும் சென்னையில் லேசான முதல் மிதமான மழை பெய்ய கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.