சனி, 15 செப்டம்பர், 2018

பெற்றோர்களுக்கு எதிராக வெடித்தது சிறார்களின் புதுப்புரட்சி! September 15, 2018

ஸ்மார்ட்போன்களை பெற்றோர் அதிகம் பயன்படுத்துவதற்கு எதிராக குழந்தைகள் ஒன்று சேர்ந்து ஜெர்மனியில் நடத்திய ஆர்ப்பாட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்துள்ளது. 

ஸ்மார்போன் யுகமாக கருதப்படும் நவீன யுகத்தில் மக்களின் பெரும்பான்மையான நேரத்தை ஸ்மார்ட்போன்களே விழுங்கிவிடுகின்றன. இரவு, பகல் என்று பாராமல் சமூக வலைதளங்களிலும், படம் பார்ப்பதிலும், கேம்ஸ் விளையாடுவதிலும் பெரும்பாலானோர் ஈடுபட்டு வருகின்றனர். இளம் தலைமுறையினர் மட்டுமின்றி திருமணமாகி குழந்தை பெற்றவர்களும், குழந்தைகளை கவனிப்பதில் உரிய ஆர்வமற்று ஸ்மார்ட்போன்களே கதியென்று இருக்கின்றனர். இதற்கு எதிராகவே தற்போது சிறார்களின் போராட்டம் ஒன்று கண்டன முழக்கங்களுடன் நடைபெற்று முடிந்துள்ளது.

ஜெர்மனியின் ஹம்பர்க் நகர வீதியில் பதாகைகளுடன் திரண்ட சிறார்கள் பெற்றோர்கள் அதிக நேரம் ஸ்மார்ட்போனில் நேரத்தை செலவிடுவதற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். எமில் எனும் 7 வயது சிறுவனில் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.



“நாங்கள் இங்கிருக்கிறோம். நாங்கள் கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கிறோம். ஏனெனில், நீங்கள் உங்கள் ஸ்மார்போனே கதியென அதையே பார்த்துக் கொண்டிக்கிறீர்கள்” என்ற முழக்கங்களை முழங்கியவாறு சிறார்கள் சாலையில் ஊர்வலமாகச் சென்றனர். போராட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எமில், இந்த போராட்டத்திற்குப் பிறகாவது பெற்றோர்கள் ஸ்மார்போன்களை விடுத்து எங்களுடன் அதிக நேரம் செலவழிப்பார்கள் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

பெற்றோரின் ஸ்மார்போன் அடிக்சன் (smartphone addiction) குழந்தைகளின் நடத்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவது உளவியல் ஆய்வுகளின் வழி தெரியவந்துள்ளது. குழந்தைகள் அதீத அடம்பிடிக்கும் வகையில் அழுதல் மற்றும் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாவது உள்ளிட்டவை பொதுவாக ஏற்படக்கூடிய பாதிப்புகளாக உள்ளது.