உலகிலேயே புலிகள் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்திய முதல் நாடு என்ற அந்தஸ்தை நேபாளம் விரைவில் அடைய உள்ளது.
கடந்த 2010 நவம்பரில் ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகரில் புலிகள் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக, புலிகள் வாழ்விட நாடுகளான ரஷ்யா, நேபாளம், இந்தியா, வங்காளதேசம், சீனா, மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட 13 நாடுகள் கலந்துகொண்ட சர்வதேச புலி பாதுகாப்பு கூட்டம் நடைபெற்றது.
அப்போதைய காலகட்டத்தில் உலகில் மொத்தமே 3,200 புலிகளே வனப்பகுதிகளில் வசித்துவந்ததால், அந்த எண்ணிக்கையை அடுத்த புலிகள் ஆண்டான (Tiger Lunar Year) 2022க்குள் இருமடங்காக உயர்த்துவதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.
இதன் பின்னர் புலிகள் எண்ணிக்கையை அதிகரிக்க பல முயற்சிகளை மேற்கொண்டதன் பயனாக 2009ஆம் ஆண்டு 121 என்ற எண்ணிக்கையில் இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 235ஆக அதிகரித்துள்ளது. தேசிய பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படும் இன்றைய நாளில் இந்த அறிவிப்பை நேபாளம் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவைக் காட்டிலும் முன்னதாகவே புலிகள் எண்ணிக்கையை கிட்டத்தட்ட நேபாளம் இருமடங்காக உயர்த்தியுள்ளது. இந்நிலையில் புலிகள் பல்வேறு காரணங்களால் அழிந்தும், அழிக்கப்பட்டும் வரும் சூழலில் உலகிலேயே புலிகள் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்திய முதல் நாடு என்ற அந்தஸ்தை நேபாளம் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.