செவ்வாய், 18 செப்டம்பர், 2018

தமிழகம் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு! September 18, 2018

Image


தமிழகம் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய, தெற்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை. மத்திய கிழக்கு வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க தாக்கத்தின் காரணமாகவும், தெற்கு ஆந்திரா முதல் கோவா வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதன் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, ஒர் இரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கனமழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தை பொருத்த வரை அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் தலா 6 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதே போல் நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜார், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் உள்ளிட்ட இடங்களில் தலா 4 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மேலும், திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம், செங்குன்றம்,  காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், சென்னை விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் தலா 3 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதன் தாக்கம் காரணமாக கடல் சீற்றம் அதிகம் காணப்படும் என்றும், மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வரை அதிகபட்சமாக 55 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகம் இருக்கும் என்பதால் மத்திய மற்றும் தெற்கு வங்ககடல்,
 அந்தமான் கடற்பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்த வரை மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும்,  குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என தெரிவித்துள்ளது.