செவ்வாய், 25 செப்டம்பர், 2018

12ம் வகுப்பு மாணவியின் உயிரை ஒரே இரவில் இரு முறை காப்பாற்றிய ஆபத்பாந்தவன்! September 25, 2018

ஒரே இரவில் 12ம் வகுப்பு மாணவியின் உயிரை இரு முறை ஒருவர் காப்பாற்றியிருக்கும் வினோத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த சையது நாசர் ஹூசைன் (43வயது) என்பவர் பிளம்பிங் பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். தினமும் கடையை அடைத்துவிட்டு இரவில் வஷி பாலத்தின் வழியாக வீட்டுக்கு திரும்புவார். வஷி பாலம் என்பது மும்பையையும், நவி மும்பை பகுதியையும் இணைக்கும் கடல் மீது கட்டப்பட்டுள்ள ஒரு பாலமாகும். மும்பையின் Mankhurd மற்றும் நவி மும்பையின் வஷி ஆகிய பகுதிகளை இப்பாலம் இணைக்கிறது.

இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணியளவில் தனது கடையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த நாசர் ஹூசைன், பாலத்தின் மீது சிறுமி ஒருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடந்து சென்று கொண்டிருப்பதை கண்டார்.

முன்னதாக இதே பாலத்தில் தற்கொலைக்கு முயன்ற இருவரை கடந்த இரண்டு ஆண்டுகளில் நாசர் காப்பாற்றியுள்ள நிலையில், நேற்று அவர் கண்ட சிறுமி வெறும் கால்களுடன் நடந்து கொண்டிருப்பதை கண்டவுடன் (முன்னதாக காப்பாற்றப்பட்ட இருவருமே வெறும் கால்களில் நடந்தவர்கள்) ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பதை உணர்ந்தவராய் அவரது இருசக்கர வாகனத்தை அப்படியே கீழே போட்டுவிட்டு அந்த சிறுமியை நோக்கி ஓடினார். இதற்குள் அச்சிறுமி பாலத்தின் தூண் மீது ஏறி கடலுக்குள் விழுந்து தற்கொலை செய்யும் முயற்சியாக கீழே குதிக்க முயன்றுள்ளார். இதற்குள் அச்சிறுமியை பிடித்து இழுத்து அவரது உயிரை காப்பாற்றினார் நாசர்.

பின்னர் மன அழுத்தத்தில் இருந்த அச்சிறுமியின் வசிப்பிடம், நண்பர்கள், பெற்றோர்கள் குறித்து கேட்டபோதிலும் அவர் எந்த வித தகவல்களும் தர மறுத்ததையடுத்து சுமார் ஒரு மணி நேரம் அவருக்கு புத்துணர்ச்சி அளித்து மன அழுத்தத்தை போக்கும் முயற்சியாக பேசிக்கொண்டிருந்தார். பின்னர் ஒரு வழியாக, வாய்திறந்த அச்சிறுமி தான் மந்தலா பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி என்றும் ஆண் நண்பர் ஒருவர் அச்சிறுமியை ஏமாற்றியதன் காரணமாக மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, அச்சிறுமியை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவரின் வீட்டுக்கு சென்ற போது, அவரது வீடு பூட்டப்பட்டிருப்பதை கண்டனர். அவரது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு சென்றுள்ளதால அவரது உறவினர் வீட்டில் சாவி வாங்கி வந்து சிறுமியை வீட்டில் விட்டுச் சென்றுள்ளார் நாசர்.

பின்னர், தனது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த நாசர் மன அழுத்தத்தில் இருந்த சிறுமியை தனிமையில் விட்டுவிட்டு வந்துவிட்டோமே, அவர் மீண்டும் ஏதாவது விபரீத முயற்சிகளில் இறங்கினால் என்ன செய்வது என எண்ணியவராய் மீண்டும் சிறுமியின் வீட்டுக்கு திரும்பினார். அங்கு வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது, அழைத்தும் வராததால் சந்தேகமடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது அச்சிறுமி தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக மீட்கப்பட்டு ஷதாப்தி மருத்துவமனையில் அனுமதித்தார் நாசர், மேல்சிகிச்சைக்காக சியோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரது உடல்நிலை சீரானது. உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இரண்டு முறை சிறுமியின் தற்கொலை முயற்சியை தடுத்து ஆபத்பாந்தவனாக உதவிய நாசரை சிறுமியின் தந்தை நன்றி தெரிவித்தார்.

இது தொடர்பாக நாசரிடம் பேசிய போது, இதுவரை வஷி பாலத்தில் தற்கொலைக்கு முயன்ற 3 பேரை தான் காப்பாற்றியுள்ளதாகவும், அப்பாலத்தில் தெரு விளக்குகள் எரியாததால் இருட்டான சூழலை பயன்படுத்திக்கொண்டு அது ஒரு தற்கொலை களமாக உருவெடுத்துள்ளதாக அவர் கவலை தெரிவித்தார். உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பாலத்தில் விளக்குகள் பொருத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Image